தமிழக விமான நிலையங்களில் மேம்பாட்டுப் பணி- மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்..!!
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி கே சிங் கூறியுள்ளதாவது: விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய பகுதிகளில் பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.