தேசிய ஊரக குடிநீர் திட்டம்- தமிழகத்திற்கு ரூ.4,015 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு..!!
பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய ஜல்சக்தித் துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல், ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பு டிசம்பர் மாதம் வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது மொத்தமுள்ள 19.36 கோடி ஊரக பகுதி வீடுகளில் 3.23 கோடி வீடுகள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் பெற்றிருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் 7.44 கோடி ஊரக பகுதி வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8.69 கோடி வீடுகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்குள் குடிநீர்க் குழாய் இணைப்புகள் தர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆண்டிற்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 4,015 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிட்டதுபோக ரூ 262.66 கோடி ரூபாய் மீதமுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு ரூ. 17.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.