திலினிக்கும் ஜானகிக்கும் பிணை, விளக்கமறியல் !!
திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, திலினிக்கு எதிரான ஒரு வழக்கில் பிணை வழங்க மறுத்ததுடன், 16ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) உத்தரவிட்டார்.
திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில் ஒரு வழக்குக்கு 50 ஆயிரம் வீதம் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு எதிரான ஒரு வழக்கில் பிணை வழங்க முடியாது என்பதால் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.
அத்துடன், ஜானகி சிறிவர்த்தனவுக்கு எதிரான மூன்று வழக்குகளில் ஒரு வழக்குக்கு 50 ஆயிரம் வீதம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் அனுமதித்தார்.
இதேவேளை, திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, நவம்பர் 30ஆம் திகதி பிணையில் விடுவித்தார்.