;
Athirady Tamil News

கடலட்டை பண்ணைகளால் பாதிப்பு இல்லையாம்!!

0

கடலட்டை பண்ணைகளால் மீன் வளங்களுக்கோ கடல் வளங்களுக்கோ எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. கடலட்டை பண்ணைகள் தொடர்பில் விஷமத்தனமான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் தெரிவித்து , கடற்தொழிலாளர்களின் பொருளாதார மீட்சியை சிலர் திட்டமிட்டு குழப்புகின்றார்கள் என யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைகளை நிறுவியுள்ள சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்னர்.

யாழ்ப்பாணம் கடற் பிரதேசங்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை நேரடியாக அழைத்து சென்று, கடலட்டைப் பண்ணைகளின் அமைப்பு தொடர்பாக அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள கடற்றொழிலாளர்களினால் காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து, தெரிவிக்கும் போது,

கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது.

கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறையகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது.

சாதாரணமாக பண்ணைகளுக்கான அனுமதி ஆவணவ ரீதியாக(பேப்பர் வேர்க்) நிறைவு செய்து கடலட்டை பண்ணையை அமைப்பதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும்.

மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் எடுத்து, ஆவண ரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில், தளுவல் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த தளுவல் அனுமதிகள் அமைச்சரினால் தான் தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை.

கடற்றொழில் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்து, நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன.

அதேவேளை, சிலரினால் எந்த திணைக்களங்களுடனும் தொடர்பு கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சில பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நாங்களும் அறிகின்றோம்.

அவை அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதனை கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தி இருப்பதை செய்திகளில் அவதானித்திருக்கின்றோம்.

ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்குறது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம்.

மேலும் சிலர், கடல் மாசடையும், மீன்வளம் பெருகாது போன்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

ஆழம் குறைந்த சூடான கடல் நீர் உள்ள பகுதியிலேயே அட்டை வளர்ப்பு இடம்பெறுகிறது.

சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவது மிகவும் சாத்தியம் குறைவு.

இதைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் மக்களை குழப்பும் வகையில், தவறான குறுகிய நோக்கங்களுக்காக முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், எனவும் கடலட்டைப் பண்ணையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.