ஆயிரக்கணக்கான கால்நடைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன! வெளியானது அறிக்கை!!
கடந்த நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளின் சடுதியான உயிரிழப்புக்கு குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
விலங்குகளின் இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்கும்படி, விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இறப்பிற்கான காரணம்
இதற்கான காரணத்தை கண்டறிய பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளின் சடுதியான உயிரிழப்புக்கு குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என கால்நடை மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் வழங்கியுள்ளது.
அதன்படி, விலங்குகள் இறந்ததற்குக் காரணம் தொற்றுநோய் அல்ல, மாறாக கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீர் காலநிலை மாற்றம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விலங்குகள் அதிக வெப்பமான காலநிலைக்கு பழகி வருவதால், கடும் குளிரை தாங்கிக் கொள்வதில் அவற்றுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. அத்துடன் மேலும் பல கால்நடைகள் சுகயீனமடைந்துள்ளன.