தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு-கண் கலங்கிய உரிமையாளர்!! (படங்கள், வீடியோ)
சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன தங்க சங்கிலி சக பயணியினால் மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(13) மாலை உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
கல்முனை பேரூந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை(13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்குடி டிப்போவிற்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றில் ஒலுவில் பகுதியை சேர்ந்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் தனது மகளுடன் பயணம் செய்துள்ளார்.இவ்வாறு பயணம் செய்த நிலையில் அதே பேரூந்தில் பெரிய கல்லாறு பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் மற்றுமொரு பயணியும் பயணித்துள்ள நிலையில் 2 பவுண் பெறுமதியான தங்க சங்கிலி அவரை அறியாமல் பேரூந்துக்குள் தவறி விழுந்து விட்டது.
இவ்வாறு தவறவிட்ட தங்க சங்கிலியை சக பயணியாக பயணித்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் கண்டெடுத்து பேரூந்து நடத்தினருக்கு தெரியப்படுத்தியதுடன் உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில் தனது கழுத்தில் இருந்த தங்க மாலை காணாமல் சென்றதை அறிந்த காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் பயணி உடனடியாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று தொலைந்த தங்க மாலையை தேடியுள்ளார்.பின்னர் மாலை அங்கும் கிடைக்காமையினால் உடனடியாக தான் பயணம் செய்த பேருந்து நினைவு வரவே பேரூந்தில் வழங்கப்பட்ட ரிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பேரூந்து நடத்துநரின் தனது நடந்த விடயத்தை தெளிவு படுத்தியுள்ளார்.
இதன் போது பேரூந்து நடத்துநரும் மாலை ஒன்று பேரூந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் அவரை தொடர்பு கொண்டு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய காணாமல் போன தங்க மாலையை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற காணாமல் போன தங்க மாலை உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட பெண் பயணி தான் கொண்டு வந்த ஆதாரங்களை பொலிஸார் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன் போது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் காணாமல் போன தங்க மாலை தொடர்பான ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் சுமார் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக பெறுமதி கொண்ட தங்க சங்கிலி பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரான பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பேரூந்தில் தவறவிடப்பட்ட 2 பவுண் பெறுமதியான தங்க மாலையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த தங்க சங்கிலியை கண்டெடுத்த தாதிய மேற்பார்வை உத்தியோகத்தரை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் உள்ளிட்டோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.