தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாத வழக்கு- திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை..!!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட உதவியாளர் காலி பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே தற்கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அறிவிப்பு வெளியிட்டதற்கு தேவஸ்தான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தேவஸ்தான ஊழியர்கள் கொம்பு பாபு, சுவாமி நாயக், சவேல நாயக் ஆகியோர் ஐதராபாத் ஐகோர்ட்டில் தேவஸ்தானத்தின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். அதில் நாங்கள் 17 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் தேவஸ்தானம் புதிய பணியாளர்களை வேலையில் அமர்த்த அறிவிப்பு வெளியிட்டது. தேவஸ்தானத்தின் அறிவிப்புக்கு தடை விதித்து தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தனர். அவர்களது மனுவை கடந்த ஏப்ரல் 13-ம் தேதி விசாரித்த ஆந்திர ஐகோர்ட்டு தேவஸ்தானத்தில் அறிவிப்பை ரத்து செய்து மனுதாரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தேவஸ்தானம் மனு தாக்கல் செய்த 3 ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் 3 பேரும் மீண்டும் கடந்த ஜூன் மாதம் தேவஸ்தானத்தின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 27-ந் தேதிக்குள் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.