ஆந்திராவில் மாண்டஸ் புயலால் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது..!!
மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்வெங்கடரமணரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மண்டல வாரியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கே.வெங்கடரமண ரெட்டி கூறியதாவது:- திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சுமார் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பயிர் இழப்பு, மாடு, ஆடு இழப்பு, வீடுகள் சேதமடைந்த அனைவருக்கும் அரசு ஆதரவு அளிக்கும். மாவட்ட நிர்வாகம், அரசு விதிமுறைகளின்படி பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கள அளவில் ஆய்வு செய்து வருகிறது. 22 மண்டலங்களில், 46 கிராமங்கள் மற்றும் 7 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 8,215 ஹெக்டேர் விவசாய பயிர்கள், 545.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. 3,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 105 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,416 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7 கன்று குட்டிகள், 9 செம்மறி ஆடுகள் இறந்துள்ளன. 142.19 கி.மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. மின்சாரத்துறைக்கு ரூ.19.78 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து முழுமையான மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.