பாராளுமன்றத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு..!!
அருணாசலபிரதேச எல்லை பகுதியான தவாங் அருகே உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. சீனாவின் அத்துமீறல் குறித்து சபை அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேணடும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சபையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அருணாசல எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் இன்றும் காங்கிரஸ் பிரச்சினையை கிளப்பியது. பாராளுமன்ற மக்களவை கூடியதும் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் முழக்கமிட்டன. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சோனியா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மேல்சபையிலும் இந்த விவகாரத்தால் சபையில் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.