இந்தியா-சீனா மோதல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை..!!
அருணாசல பிரதேச எல்லையில் கடந்த 9-ந்தேதி இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இருந்து நேற்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால் நாடாளுமன்ற வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம் இந்த விவகாரத்தை எளிதாக கடந்து செல்ல எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. இந்த பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்று அந்த கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அந்தவகையில் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி அடுத்தகட்டம் குறித்து விவாதித்தனர். இதில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இந்த கூட்டத்துக்கு தலைைம தாங்கினார். இந்த கூட்டத்தில், இந்திய-சீன மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்துக்கு கோரிக்கை விடுப்பது எனவும், அதற்கு அனுமதி மறுத்தால் இரு அவைகளிலும் வெளிநடப்பு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சினையில் மத்திய அரசை கூட்டாக எதிர்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்தும் விவாதித்து தங்கள் கூட்டு எதிர்கால திட்டத்தை வகுத்தனர். இந்த நிலையில், சீனாவின் அத்துமீறல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் இன்றும் (வியாழக்கிழமை) கூடி விவாதிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் நேற்று வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இந்த கட்சியினர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.