பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியருக்கு யாழ்.தீவக வலய ஆசிரிய வளவாளர் பதவி வழங்கியது யார்?? (PHOTOS)
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்றைய புதன்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் மேற்படி கேள்வியை எழுப்பியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் மேற்படி ஆசிரியர் தொடர்பில் பல முறைப்பாடுகள் உள்ளன.
ஆசிரியர் சங்கமும் பல முறைப்பாடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தோம். ஆனால் குறித்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் எவையும் இடம்பெறாத நிலையில் தீவக வலயத்திற்கு தமிழ் பாட வளவாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒழுக்க பண்புகளே இல்லாத ஒருவரை ஒரு கல்வி வலயத்தின் ஆசிரிய வளவாளராக நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது யார்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார், இது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் பாடசாலையில் வெற்றிலை போடுவதாக கூட எமக்கு பல முறைப்பாடுகள் வருகிறது. ஆனால் ஆசிரியர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள்தான் வழிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.