அக்கரைப்பற்றில் கம்பியை அறுத்து தெருமின்குமிழ்களை திருடிய நாசகார செயல் !
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ் கம்பத்தை அறுத்து மின்குமிழ்களை இனந்தெரியாதோர் திருடி சென்றுள்ளனர். சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்க்கு வருகைதந்த அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் சம்பவம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டார்.
சம்பவம் தொடர்பில் பேசிய அவர், அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் யானைக் கூட்டங்களின் வருகையும், பிரயாணம் செய்கின்ற பொதுமக்களின் அசௌகரியமும், இரவு நேரங்களில் வேலை செய்கின்ற விவசாயிகளின் அத்தியாவசிய தேவையும் கருதி பெறுமதி வாய்ந்த சூரிய சக்தியில் இயங்குகின்ற மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இன்று அதிகாலை பெரிய இரும்புக் குழாயினை அறுத்து சாய்த்து விட்டு அதில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தி மின் விளக்கை திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற போது மிகவும் மன வேதனையாக இருந்தது. மாத்திரமல்லாமல் வருகின்ற போகின்ற எல்லா விவசாயிகள், பயணிகள், பொதுமக்களுக்கு எல்லாம் மிகவும் மன வேதனையை கொடுத்தது. தயவுசெய்து இவ்வாறான அநாகரிகமான செயற்பாட்டின் மூலமாக தங்களுக்கும் தங்களைச் சூழ உள்ளவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வகையான தொடர் செயற்பாடுகள் நீடிக்குமாக இருந்தால் இவ்வகையான அநாகரிகமான செயற்பாடுகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் பிரதேச சபையும் பொதுமக்களும் செயற்படுவார்கள் என்பதனை மன வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். இறுதியில் இவ்வகையான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யப்படுவதற்கு நாகரீகமான ஆயிரம் வழிகள் திறந்திருக்கின்றன சற்று மனசாட்சிக்கு இடம் கொடுத்து பொதுச் சொத்துக்களை அமானிதங்களாக பாதுகாக்க ஒவ்வொருவரும் மனதில் கொள்ளுமாறு வினையமாய் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.