கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்து சேர்ந்தது..!!
பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அதன்பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில், இறுதிக்கட்டமாக 36வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் “பேக் இஸ் கம்ப்ளீட்” என குறிப்பிட்டுள்ளது. இந்த ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.