லஞ்ச வழக்கில் நேரடி சாட்சியம் அவசியம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு..!!
லஞ்ச வழக்கில் சிக்கிய ஊழியரை தண்டிக்க நேரடி சாட்சியம் அவசியமா என்பது குறித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இது தொடர்பான விசாரணையின்போது மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து ஆஜராகி வாதிட்டார். அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 22-ம் தேதி தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:
பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தவர் இறந்து விட்டாலோ, லஞ்சம் கொடுக்கவில்லை என மாற்றி சாட்சியம் அளிக்கும் சூழலில் அந்த ஒரு காரணத்துக்காக அவரை லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. பொது ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாகவோ, லஞ்சம் பெற்றது தொடர்பாகவோ வேறு சாட்சியங்களோ, சந்தர்ப்ப சாட்சியங்களோ இருந்தால் அவை குற்றத்தை நிருபிக்க போதுமானவையாக இருக்கும்பட்சத்தில் பொது ஊழியர் தண்டிக்கப்படலாம். நேரடி சாட்சியம் அவசியம் இல்லை. ஊழல் லஞ்ச புகார் வழக்குகளில் விசாரணை அமைப்புகள், கோர்ட்டுகள் தனிக்கவனம் செலுத்தி, லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவோர்களுக்கு கடும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.