நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: மத்திய அரசு..!!
நீதித்துறை நியமனங்கள் தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று பதிலளித்தார். அப்போது அவர், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
165 நீதிபதிகள் நியமனம்
நாட்டின் ஐகோர்ட்டுகளில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 1,108 ஆக உள்ள நிலையில், கடந்த 9-ந்தேதி நிலவரப்படி 777 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 331 இடங்கள் அதாவது 30 சதவீதம் காலியாக உள்ளன. இதை நிரப்புவதற்காக பல்வேறு ஐகோர்ட்டுகளில் இருந்து பெறப்பட்ட 147 பரிந்துரைகள், அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இடையே பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. இந்த ஆண்டில் கடந்த 9-ந் தேதி வரை, சாதனை அளவாக 165 நீதிபதிகளை பல்வேறு ஐகோர்ட்டுகளில் அரசு நியமித்துள்ளது. இது ஒரு ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்காக கொலீஜியம் அனுப்பிய 20 பரிந்துரைகள் அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.
5 கோடி வழக்குகள்
சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில், டிசம்பர் 5-ந்தேதி நிலவரப்படி 27 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 7 இடங்கள் காலியாக இருக்கின்றன. நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுவிட்டது. இவ்வளவு பெரிய அளவில் தேங்கியுள்ள வழக்குகளின் தாக்கம் பொதுமக்களிடம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில், கோர்ட்டுகளின் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் குறைவான அதிகாரமே உள்ளது. கொலீஜியம் பரிந்துரைக்காத பெயர்களை அரசால் பரிசீலிக்க முடியாது. நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான பெயர்களை விரைவில் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்தது தவறு
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். ஆனால் நீதிபதிகள் நியமனங்களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்படியே தொடரும். அது குறித்து கேள்விகள் தொடர்ந்து எழும். தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது தவறு என ஓய்வுபெற்ற நீதிபதிகள், நீதித்துறை வல்லுனர்கள், வக்கீல்கள் என பல தரப்பினரும் கூறியுள்ளனர் என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.