100-வது நாளை எட்டும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை..!!
வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது. நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர்.
ஆதரவு, எதிர்ப்பு
ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர். மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் இந்த சலசலப்புகளையும் தாண்டி இந்த யாத்திரையால் கட்சிக்கு நீண்டகால நன்மை விளையும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
காலம் பதில் சொல்லும்
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, ‘முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது’ என கூறினார். இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும் என்று குறிப்பிட்ட சஞ்சய் ஜா, காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் அதன் தொண்டர்கள் மூலம் அணிதிரட்டலைத் தக்கவைத்துக் கொள்வதே இனி உள்ள முக்கியப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த யாத்திரை கட்சிக்கு நம்பிக்கையின் ஒளியை அளித்துள்ளதாகவும், சாதாரண தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பாண்டே, எனினும் அது தேர்தல் ஆதாயமாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்லும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.