பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!
உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நகர் புறங்களுக்கு அவசியமான உணவு உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் என்பவற்றை முறையாக ஒழுங்குபடுத்தும் நோக்கில் இலங்கை ஒரு கூட்டு பொறிமுறையொன்றை உருவாக்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இப்பொறிமுறையின் கீழ் போஷனை குறைபாடு, உணவு இல்லாதவர்களுக்கு எவ்வாறு உணவை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை கடினமான காலப்பகுதியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ரொட்டரிக் கழகம் இலங்கைக்கு மருந்துகளைப் பெற்றுக் கொடுத்தமை தொடர்பிலும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்தார்.
ரொட்டரிக் கழகத்தின் சர்வதேச தலைவர் திருமதி. ஜெனிபர் ஜோன்ஸின் இலங்கை வருகையை கௌரவிக்கும் முகமாக ரொட்டரி மாவட்டம் 3220 இனால் அண்மையில், ஷெங்ரில்லா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மில்லியன் மரங்களை நடுவது தொடர்பிலான உங்களது பிரசாரத்தை நான் கண்டேன். அடுத்த வருடம் முழுவதும் நாம் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தணிப்பதற்கான விடயங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம். சில சட்டங்கள் நிறைவேற்றப்படும். நகர் வனங்கள் மற்றும் இன்னும் பல செயற்திட்டங்களை நாம் தொடங்க வேண்டும். இதுபோன்ற சில செயற்திட்டங்களில் ரொட்டரியிலுள்ள நீங்களும் பங்கெடுப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். இது தொடர்பிலும் ரொட்டரியிடம் உதவி கேட்க வேண்டுமென எனக்குத் தோன்றியது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், நெருக்கடியான சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் புத்தாக்கமுடைய வகையில் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அதேநேரம் நாட்டை எவ்வாறு உலகின் முன்னணி நிலைக்கு கொண்டு செல்லலாம் என்பதை, தைரியமாக பார்வையிட வேண்டுமென்றும் தெரிவித்த ஜனாதிபதி, இதுவொன்றும் கடினமான, முடியாத காரியம் அல்லவென்றும் கூறினார்.
அடுத்த 25 வருடங்களில் இந்நாட்டை மிகவும் அழகான, உறுதியான நாடாக உருவாக்கவதற்கு பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியமென்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கென தனித்துவமாக வரையப்பட்ட ஓவியம் ஒன்றை ரொட்டரி கழகத்தின் சர்வதேச தலைவர் திருமதி.ஜெனிபர் ஜோன்ஸ் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
முதற்பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ரொட்டரி கழகத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றியதாவது-
ஒரு கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன். நான் பிரதமராக இருந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமை சற்று மோசமாக இருந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த காலகட்டத்தில் மருந்து தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்த்து. அப்போது கெஹெலிய என்னிடம் வந்து தயவுசெய்து மருந்து வாங்குவதற்காக எனக்கு கொஞ்சம் நிதியை ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டார். அப்போது நாம் முற்றிலும் ஒடிந்துபோயிருந்தோம். நான் என்ன செய்ய முடியும்? இதற்காக ரவியிடமும் ரொட்டரியிடமும் செல்வதே சரியென நான் நினைத்தேன். அவர்களும் முன்வந்து இந்த உயிர்நாடியை ஆரம்பித்தார்கள். FAO உடன் இணைந்து பணியாற்றுமாறு அவர் கூறியது போல, நாம் அனைவரும் ஒன்றுகூடியதுடன் மருந்துகளையும் பெற்றுக் கொண்டோம். எனவே ரொட்டரிக்கும், ரவிக்கும் நன்றிகள்.
உக்ரெய்ன் யுத்தம், உரப் பற்றாக்குறை ஆகியவற்றினால் உணவு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அடுத்த வருடமளவில் உணவு பாதுகாப்பில் நாம் தன்னிறைவுக் கொண்டவர்கள் என்பதை உறுதிபடுத்த வேண்டும். நீங்கள் எமது அடுத்த நிகழ்ச்சித் திட்டமான தேசிய உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும்.
நாம் ஏற்கனவே இதை ஆரம்பித்து விட்டோம். எமது நாட்டில் போதுமானளவு உணவு உள்ளது என்பதனை உறுதி செய்வதற்கான பிரச்சாரங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். இதற்காக அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயற்படும் அரச பொறிமுறையொன்றையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். மாவட்டச் செயலாளர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத் திட்டம் பின்னர் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக பின்னர் மக்களிடம் கையளிக்கப்படும்.
மாவட்டச் செயலகத்தின் கூட்டுப் பொறிமுறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அரச திணைக்களங்கள், மாகாண நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, அவற்றை உள்ளுர் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றமாறும் பணித்துள்ளோம்.
பல்வேறு மக்களும் இத்தொகுதிகளை பொறுப்பேற்றுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், அப்பிராந்தியத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள், சமூக சேவை அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தனியார் துறையினர் என பலரும் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
எனவே நீங்களும் உணவு பயிர்ச்செய்கை, களஞ்சியப்படுத்தல் மற்றும் நகர்புறங்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய செயன்முறைகளை ஒழுங்கபடுத்துவதற்காக சில தொகுதிகளை பொறுப்பேற்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.
மறுபுறத்தில், கொழும்பின் சில தொகுதிகளில் உள்ளது போல போஷாக்கின்மை மற்றும் உணவு இல்லாதவர்களுக்கு எவ்வாறு உணவைப் பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
நாடு முழுவதும் நாம் உணவு உற்பத்தி செய்கின்றோம். உணவு இல்லாதவர்களை அடையாளம் காண்கின்றோம். அவர்களுக்கு உடனடியாக உதவுவதற்கு முயற்சிக்கிறோம். சமூக சமையலறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதுவே அதற்கான சரியான தருணம். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பு பிரசாரத்திற்காக எம்முடன் இணைவீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எவரும் பசியுடன் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
சில மக்கள் மிகவும் நெருக்கடியான காலப்பகுதியை எதிர்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களை பராமரிப்பதற்காக எம்மிடம் போதுமான வளங்கள் இருக்குமென நான் நினைக்கின்றேன். எனவே நீங்கள் எமக்கு கொடுத்த உயிர் நாடிக்கு மிக்க நன்றி. அது தொடரும் அதேநேரம் எமது இந்த பிரசாரத்துடனும் நீங்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
ரொட்டரி என்பது நன்மைக்கான ஒரு சக்தி. அரசியல், சமூக அல்லது பொருளாதார பிரிவுகளாலும் அதிகமாக வெறுப்பினாலும் இந்த உலகில் பிளவுபட்டுள்ள மனிதர்களை சமூகம் என்ற அடிப்படையில் ஒன்றாக சேர்க்கின்றது. உலகிலுள்ள வெறுப்புணர்வு அதிகரித்துச் செல்கிறது. அந்தவகையில் சில நல்ல செயற்பாடுகளுக்காக சக்திகள் இருக்க வேண்டும். அந்த நல்ல சக்தியாகவே ரொட்டரியும் செயற்பட்டு வருகிறது.
நீங்கள் சிக்காகோவில் இருந்தபடி உலகம் முழுவதும் பரந்து செயற்படுகின்றீர்கள். தற்போது நிங்கள் வட கொரியாவை தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு நாட்டையும் இணையத்திற்கூடாக சென்றடைந்துள்ளீர்கள்.
அங்கே இரகசியமாகச் செயற்படும் ரொட்டேரியன்களும் இருக்கலாம். எவ்வாறாயினும் ஒரு சமூகத்தில் தமது இனத்துக்கு உதவுவதற்காக தம்மை அர்ப்பணித்துள்ளவர்களை ஒரு சமூகமாக ஒரு குழுவாக இணைத்துள்ளீர்கள். போலியோவை ஒழிப்பதற்காக மிகச் சிறந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இங்கே இலங்கையர் மட்டுமன்றி இந்தியா, மாலைதீவு, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ரொட்டேரியன்கள் உள்ளனர். நீங்கள் அனைவரும் பிரிவினைகளைக் களைந்து, உலகை மிகச் சிறந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஒரு இலக்கை அடைவதற்காக செயற்படுகின்றீர்கள். நீங்கள் உலகம் முழுவதும் முன்னெடுத்து வரும் பணிகளுக்காக நன்றிகள்.’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.