100 கிலோ கஞ்சா கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு..!!
ஆந்திராவில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டை விளைபட்டி விலக்கு பகுதியில் வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தனர். அதில் மினிலாரியில் பின்புறம் பக்கவாட்டில் 4 இடங்களில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் 100 கிலோ கஞ்சா கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். தொடர்ந்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரை சேர்ந்த தளவாய்மாடன் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக மினி லாரியில் தூத்துக்குடிக்கு கடத்தி வந்துள்ளார். கஞ்சா கடத்தலை தடுப்பதற்கான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த அவர்கள் மாற்றுப்பாதை வழியாகவும், கிராமப்பகுதிகள் வழியாகவும் வர முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆந்திராவில் இருந்து வேலூர், கும்மிடிப்பூண்டி வழியாக மினி லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருக்க பல்வேறு இடங்களில் கிராமப்பகுதிகள் வழியாக சுற்றி போலீசாரின் சோதனை நடைபெறாத இடங்களை தேர்வு செய்து அதன்வழியே வந்துள்ளனர். அவ்வாறு மதுரை வந்த அவர்கள் ராஜபாளையம், தென்காசி வழியாக அம்பாசமுத்திரம் வந்து அங்கிருந்து தூத்துக்குடி செல்ல திட்டமிட்டனர். இப்பகுதி வழியாக வந்தால் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பலாம் என கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து போலீசார் முன்னெச்சரிக்கையாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்த டிரைவர் போலீசாரிடம் சிக்கினார். இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? முக்கிய புள்ளிகள் யாருக்குதம் இதில் தொடர்பு உள்ளதா என கைது செய்யப்பட்ட டிரைவர் தளவாய் மாடனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.