பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் மிரட்டி ஆசிரியைகள் 2 பேரிடம் செயின் பறிப்பு..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வாஹதிவாரி கன்றிக பகுதியை சேர்ந்தவர்கள் பத்மா (வயது 40), சரஸ்வதி (45). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த 3 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். பைக் ஓட்டி வந்த வாலிபர் மட்டும் அங்கேயே நின்று கொண்டார். மற்ற 2 வாலிபர்கள் பள்ளிக்குள் வேகமாக வந்தனர். அவர்கள் ஆசிரியை பத்மா பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி யாராவது சத்தமிட்டால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின்னர் பத்மா அணிந்திருந்த நகைகளை தருமாறு கேட்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துக் கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்த வகுப்பறைக்குள் சென்று அங்கு ஆசிரியை சரஸ்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பிச் சென்றனர். இது குறித்து ஓஜிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து நகை பறிகொடுத்த ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்களிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.