சபரிமலையில் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வனப்பகுதியில் கூடுதல் இடவசதி..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். அவர்களை நெரிசலின்றி 18-ம் படி ஏற பாதுகாப்பு போலீசாரும், கோவில் ஊழியர்களும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்றாலும் சன்னிதானம் சென்று பக்தர்கள் 18-ம் படி ஏற பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதையடுத்து கோவிலுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் தனி வரிசை ஏற்படுத்தவும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கூட்ட நெரிசல் உள்ள நாட்களில் 18-ம் படியில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை ஏற்றி விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களாலும் பம்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களும், தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களும் அவர்களின் வாகனங்களை எடுத்து செல்ல முடியாத அளவுக்கு அங்கு நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சீர்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை போக்க பார்க்கிங் வசதியை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வெளிமாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சபரிமலை வனபகுதியில் கூடுதல் இடவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்காக வனத்துறையுடன் பேசி பார்க்கிங் பகுதிகளை கண்டறிந்து அங்கு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் இந்த பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.