22 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைப்பு- மத்திய அரசு..!!
பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது: ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 2018 ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், 50 கோடி மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளுக்காக தினசரி ஏழு முதல் எட்டு லட்சம் சுகாதார அட்டைகள் அச்சிடப்படுகின்றன. அடுத்த 6 மாதங்களில் 50 கோடி அட்டைகள் பயனாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 22,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.