எல்லையில் அத்துமீறும் சீனா- மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தல்..!!
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் அத்து மீறிய சீனா ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 13ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விதி எண் 267 இன் கீழ் சீன விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மேலும் பல காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவை நிகழ்ச்சி தொடங்கியதும், அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த ஹரிவன்ஷ் அதை அனுமதிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கோரும் விவாதங்களுக்கு அரசு அனுமதி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த கோருவதை ஏற்க இயலாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ்கள் அவை தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் அவையின் மையப் பகுதிக்கு சென்று அவர்கள் முற்றுகையிட்டதால் நண்பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.