இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி.. 7வது ஆண்டாக குறையாத மவுசு: ஸ்விகி வெளியிட்ட தகவல்..!!
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதன்மூலம் இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது. அதேபோல் வெளிநாட்டு உணவுகளை வாங்கி உண்பதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் மற்றும் சுஷி போன்ற உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விகி கூறியிருக்கிறது. இத்தாலிய உணவான ரவியோலி மற்றும் கொரிய உணவான பிபிம்பாப் ஆகியவை பிரபலமான வெளிநாட்டு உணவு வகைகளையும் நிறைய ஆர்டர் செய்துள்ளனர். இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை உள்ளன.