பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பிலாவல் பூட்டோ – தரம் தாழ்ந்த கருத்து என இந்தியா பதிலடி..!!
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என கூறினார். அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டு பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார். இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பூட்டோ சர்தார் கூறுகையில், ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடை விதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு என தெரிவித்தார்.