;
Athirady Tamil News

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது மத்திய அரசு உறுதி..!!

0

தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி ெசய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருப்பத்தின் பேரிலானது
வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை.

54 கோடி பேர் விருப்பம்
அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார். முன்னதாக மாநிலங்களவையில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, ‘நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.