;
Athirady Tamil News

2024 இறுதிக்குள் அமெரிக்க தரத்துடன் இந்திய சாலைகள்- நிதின் கட்கரி உறுதி..!!

0

டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நாட்டில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும். நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன். கட்டுமானத் தொழில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய பொருட்கள் மற்றும் வளங்களில் 40 சதவீதத்தை பாதுகாக்கிறது. வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். சிமென்ட் மற்றும் இரும்பு ஆகியவை கட்டுமானத்திற்கான முக்கியமான பொருட்கள் என்பதால் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம். தூய எரிசக்தியான பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில், விமானம், ரெயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.