பெற்றோரை இழந்ததால் அனாதையாகி கோவிலில் பிச்சை எடுத்த 10 வயது சிறுவன் கோடீஸ்வரனாக மாறினான்..!!
உத்தரபிரேதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பன்டோலி கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுவன் ஷாஜெப். இவரது தந்தை முகமது நவேத் கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக நோய் வாய்ப்பட்டு இறந்தார். சிறுவனின் தாயார் இம்ரானாபேகம், கணவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே யமுனா நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகனை அழைத்து கொண்டு சென்று விட்டார். அங்கு பெற்றோருடன் வசித்த இம்ரானாபேகம் சிறிய வேலைகளுக்கு சென்று தனது மகனை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இம்ரானாபேகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் திடீரென அனாதையாக தவித்த ஷாஜெப் அப்பகுதியில் புனித தலங்களில் ஒன்றான பிரன்காளியார் பகுதியில் உள்ள கோவிலில் அடைக்கலம் புகுந்தார். பின்னர் பிச்சை எடுத்து வாழ்ந்த ஷாஜெப் திடீரென கோடீஸ்வரனாக மாறியுள்ளார். அதாவது ஷாஜெப்பின் தந்தை வழி தாத்தா முகம்மது யாகூப் கடந்த 2021-ம் ஆண்டில் இறந்தார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களில் ஒரு பங்கை ஷாஜெப்புக்கு வழங்குவதாக உயிலில் கூறியிருந்தார். அதன்படி ஷாஜெப்புக்கு சொந்தமாக இரட்டை மாடி வீடு மற்றும் 5 பெரிய நிலங்கள் அவருக்கு சென்றது. இதையறிந்த உறவினர்கள் ஷாஜெப்பை பல இடங்களிலும் தேடிப்பார்த்த போது அவரை காணவில்லை. பின்னர் இதுபற்றி அவரது உறவினர்கள் சமூக வலைத்தளத்தில் ஷாஜெப்பின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினர். எனினும் அவர் உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாஜெப், பிரன்காளியாரில் பிச்சைக்காரனாக வாழ்வது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு தங்களுடன் அழைத்து சென்றனர். இதுகுறித்து ஷாஜெப்பின் உறவினரான ஷாஆலம் கூறுகையில், ஷாஜெப் எங்களுடன் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமமாக இருந்தது. நாங்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில் தான், அவரை கண்டுபிடித்து விட்டோம் என்றார்.