தமிழர்களின் வாழ்வோடு ஒன்றியது ஜல்லிக்கட்டு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்..!!
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மனுதாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை ஒரு வாரத்துக்குள் தொகுத்து எழுத்துப்பூர்வமாக அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் தீர்ப்பையும் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் வாதம் எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது: தமிழக கலாச்சாரம், பாரம்பரியம் நாட்டு காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டின்போது எந்த விதிமீறல்களும் இல்லை. காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று. காளைகளை பெருமைப்படுத்தவும், கவுரவிக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காலம் காலமாக விவசாயத்துடன் ஜல்லிக்கட்டு ஒன்றி போய் இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.