பொய்யின் அடிப்படையில் நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது- ராகுல்காந்திக்கு, ராஜ்நாத்சிங் பதில்..!!
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியாக இருந்தாலும் சரி, தவாங் பகுதியாக இருந்தாலும் சரி, சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று தெரிவித்தார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசு குறித்த ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த அவர், யாருடைய நோக்கத்தையும் எப்போதும் அவர் சந்தேகிப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சி தலைவரின் நோக்கத்தை கேள்வி கேட்டதில்லை என்றும், கொள்கையின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். உண்மையின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க வேண்டும், பொய்யின் அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் செய்ய முடியாது, சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் செயல்முறையே சரியான அரசியல் ஆகும் என்றும் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு அவர் பதில் அளித்தார். உலக நன்மை மற்றும் செழுமைக்காகவே இந்தியா வல்லரசாக மாற விரும்புகிறது, இதனால் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் யாரும் கருதக் கூடாது என்றும் மத்திய மந்திரி குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட கைப்பற்றும் எண்ணம் இந்தியாவிற்கு கிடையாது, பிரதமர் மோடி தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் தெரிவித்தார்.