;
Athirady Tamil News

இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்- மத்திய மந்திரி அமித்ஷா..!!

0

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களும், பீகார் மற்றும் ஒடிஸா மாநில துணை முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மண்டலக் கவுன்சில் கூட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் 93 சதவீத விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருப்பது மிகப்பெரிய சாதனை. பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு, தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப் பட்டதே இதற்கு காரணம். மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருமித்த ஒத்துழைப்புக்கு , மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்கு மண்டல மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.கிழக்கு மண்டலத்தில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க தீர்க்கமான வழிமுறைகள் உருவாக்கப்படும். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரித் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் கண்காணிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு நிகரான வளர்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.