பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான வரி 5% ஆக குறைப்பு..!!
டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 48 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சௌத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சகம் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டியில் இணக்கத்தை உருவாக்குவதற்கும் வர்த்தக வசதி நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதன்படி பயறு வகைகளின் உமி, தவிடு மீதான 5% வரி ரத்து செய்யப்படுகிறது. பெட்ரோலுடன் கலப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எத்தைல் ஆல்கஹால் மீதான வரி 18.5% இருந்து 5% ஆகக் குறைக்கப்படுகிறது. நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு 22% என்ற உயர் அளவான இழப்பீட்டு வரி விகிதம் பொருந்தும். ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே இ-வணிக ஆப்ரேட்டர்கள் மூலம் பொருள்கள் மற்றும் சேவைகள் வழங்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக பான் மசாலா மற்றும் குட்கா வணிகங்களில் வரி ஏய்ப்பைத் தடுக்கும் பிரச்சினை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.