அமைச்சர் கார் மீது செருப்பு வீசி தாக்குதல்- போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள்..!!
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.கனிமவளத்துறை அமைச்சராக இருப்பவர் பெத்தி ரெட்டி, ராமச்சந்திரா ரெட்டி. மூத்த அமைச்சரான இவர் நேற்று சத்ய சாய் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அனந்தபுரம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணா. இவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்.ஏ. மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் பெனுகொண்டாபுரம் சென்ற அமைச்சர் பெத்தி ரெட்டி, ராமச்சந்திரா ரெட்டி, அனந்தபுரம் எம்.எல்.ஏவை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆய்வுப்பணிக்கு சென்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ.வை காரில் இருந்து இறக்க வேண்டும் எனக் கூறி காரை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அமைச்சர் கட்சி தொண்டர்களின் கோரிக்கையை ஏற்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தொண்டர் ஒருவர் தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அமைச்சரின் கார் மீது வீசினார். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு நிலவியது.இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் கட்சி தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். எம்.எல்.ஏ. மீது இருந்த அதிருப்தி காரணமாக அமைச்சரின் கார் மீது ஆளுங்கட்சி தொண்டர்களே செருப்பு வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.