சபரிமலையில் நாளை முதல் பெண்கள்-குழந்தைகளுக்கு தனி வரிசைகள் தொடக்கம்..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தே வருகிறது. விடுமுறை நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகமாகிறது. தினமும் சராசரியாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை திருவதாங்கூர் தேவசம் போர்டு அதிகரித்தது. ஒரு நாளில் 19 மணி நேரம் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் காத்திருப்பு நேரம் குறைந்தபாடில்லை. சில நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மயக்கம் அடையும் நிலையும் உருவானது. இதுபற்றி தெரியவந்ததும், அவர்களுக்கு தரிசனத்தில் சிறப்பு சலுகை அளிக்க தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த 3 அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தனி வரிசை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் சபரிமலை வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பக்தர்களின் பாதுகாப்புக்காக சபரிமலையில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். அதன்படி இன்று சபரிமலையில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாளை (19-ந் தேதி)முதல் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு தனி வரிசை செயல்படும் என தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தரிசனம் செய்ய 1 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் தனி வரிசை செயல்பாடு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரக்கூட்டம் வரை நெரிசல் நீடித்தால் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் இருந்து நகர்ந்து, சந்திரானந்தன் சாலை வழியாக நடை பந்தலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து 1-வது அல்லது 9-வது வரிசை வழியாக 18-ம் படிக்கு கீழே உள்ள திருமுட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். குழுவாக வரும் பக்தர்களில் சிறப்பு வரிசை தேவைப்படுவோர், வரிசையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு தரிசனம் முடிந்ததும் சந்நிதானத்தில் சக பக்தர்களுக்காக காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து உள்ளது.