;
Athirady Tamil News

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது எது? – சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரபரப்பு பேச்சு..!!

0

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 9-ந் தேதி பதவி ஏற்ற டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மும்பை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது, கடந்த காலத்தில் பணியாற்றிய பல்வேறு நீதிபதிகள் பற்றியும், அவர்களுடனான தனது அனுபவம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசும்போது அவர் கூறியதாவது:- 1975-ம் ஆண்டு அவசர நிலையின்போது மங்கலாகிப்போன சுதந்திர ஜோதியை எரிய வைத்தது ரானே போன்ற நீதிபதிகள்தான். அவசர நிலை காலத்தில் கோர்ட்டுகளின் சுதந்திரம் குறித்த அச்சமற்ற உணர்வுதான், ஜனநாயகத்தை காப்பாற்றியது. நமது கோர்ட்டுகளின் கடுமையான பாரம்பரியத்தாலும், நீதிபதிகள் ஒன்றுகூடி கொடி ஏற்றியதாலும் நமது இந்திய ஜனநாயகம் உறுதியுடன் நிலைத்து நிற்கிறது. நமது கோர்ட்டுகள் சுதந்திரத்தின் ஜோதியாக நிற்கின்றன. அவை அவ்வாறே எப்போதும் நிலைத்து நிற்கும்.

தொழில்நுட்பம் முக்கியம்

எதிர்காலத்துக்கான சட்டத்தை எழுதவும், வடிவமைக்கவும், வகுக்கவும் ஏற்றவகையில் மும்பை ஐகோர்ட்டின் பலம் உள்ளது. மும்பை ஐகோர்ட்டுக்கு சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வக்கீல்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதில் நீதிபதிகள் முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நீதித்துறை நிறுவனங்களின் இயல்பு கடந்த சில பத்தாண்டுகளாக மாறி இருக்கிறது. நமது செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தின் உபயோகம் அதிகரித்து வந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் போய் இருந்தால் நம்மால் செயல்பட முடியாமல் போய் இருக்கும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் போடப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை கலைத்து விடக்கூடாது. தொழில்நுட்பமானது, நமக்கு வசதியாக இல்லாவிட்டாலும்கூட, நாம் அவற்றை பயன்படுத்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.