;
Athirady Tamil News

இந்திய-சீன படைகள் மோதல்: நாடாளுமன்ற விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

0

காங்கிரஸ் பாதயாத்திரைக்காக ராஜஸ்தானுக்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தவுசா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும். விவாதத்துக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். ராணுவ மந்திரியோ, மத்திய வெளியுறவு மந்திரியோ பதில் அளிக்க தேவையில்லை. எத்தனையோ முன்னாள் பிரதமர்கள் இதுபோன்ற விவாதத்துக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியோ விவாதத்துக்கு பயந்து ஓடுகிறார். அவர் தனது மவுனத்தை கலைத்துவிட்டு, நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும்.

சீனாவுக்கு நற்சான்றிதழ்
பிரதமர் மோடி, ‘சீனா’ என்ற வார்த்தையையே உச்சரிக்க மறுக்கிறார். ”யாரும் நம் பக்கம் வரவில்லை. யாரும் நமது பகுதியில் இருக்கவில்லை” என்று ஒருதடவை சொன்னார். அவர் அளித்த நற்சான்றிதழால் நமது பேரம் பேசும் குறைந்துவிட்டது. கடந்த 1988-ம் ஆண்டு, எல்லையில் நாம் வலிமையாக இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சீனாவுக்கு சென்றார். அதன்பிறகு இருதரப்பு உறவு இன்னும் வலுவடைந்தது.

ஆனால், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைமை மாறிவிட்டது. சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்றிதழ் கொடுக்க தொடங்கி விட்டார் என்று அவர் கூறினார்.

ஜின்பிங்குடன் நெருங்கிய உறவு
பேட்டியின்போது, உடன் இருந்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா கூறியதாவது:- பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, அதிபர் ஜின்பிங், சீனாவில் உயர் பதவியில் இருந்தார். அப்போது இருந்தே இருவருக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. தனது சீன பாசம் காரணமாக, இந்திய மலை ஏறும் படைப்பிரிவை கூட வர விடாமல் மோடி அமைதி காக்க செய்து விட்டார். சீன மோதல் குறித்து அவர் பதில் அளிக்க மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் விரும்பவில்லை.

நன்கொடை
கடந்த காலத்தில் பா.ஜனதா தலைவர்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியிடம் பயிற்சி பெற சீனாவுக்கு சென்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடம்பெற்றுள்ள விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேசன் போன்ற அமைப்புகளுக்கு சீனாவுடன் எத்தகைய உறவு உள்ளது? வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மகன் சம்பந்தப்பட்ட அமைப்பு, சீன தூதரகத்திடம் 3 தடவை நன்கொடை பெற்றுள்ளது. இதனால்தான், சீனா விவகாரத்தில் பா.ஜனதா அமைதி காக்கிறதா என்று தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.