வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டிவிட்டோம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயாவிலும், திரிபுராவிலும் புத்தாண்டில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.
ரூ.6,800 கோடி வளர்ச்சி திட்டங்கள்
இந்த நிலையில் அங்கெல்லாம் வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடுக்கி விடுகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநில கவுன்சிலின் பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் ரூ.6,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாக்களை மத்திய அரசு நேற்று நடத்தியது. ஷில்லாங்கில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த விழாவில், 4-ஜி என்னும் நான்காம் தலைமுறை செல்போன் கோபுரங்கள், ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். என்னும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன வளாகம், மேகாலயா-மணிப்பூர்-அருணாசலபிரதேசம் வழித்தடத்தில் 4 சாலைகள், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அசாமில் 21 இந்தி நூலகங்கள். அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 6 சாலை திட்டங்கள், துரா மற்றும் ஷில்லாங் தொழில்நுட்ப பூங்காவின் இரண்டாம் கட்டத்தில் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையம் என ரூ.2,450 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசினார்.
கால்பந்து போட்டி
அப்போது அவர் கூறியதாவது:- மேகாலயா மாநிலம், இயற்கை மற்றும் கலாசாரத்தில் செழிப்பான மாநிலம் ஆகும். மக்களின் வரவேற்பிலும், அரவணைப்பிலும் இந்த செழுமை பிரதிபலிக்கிறது. ஒரு பக்கம் உலக கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த கால்பந்து மைதானத்தில் வளர்ச்சிக்கான போட்டியை முன்னெடுத்து வருகிறோம். உலக கால்பந்து போட்டி கத்தார் நாட்டிலே நடைபெற்றாலும் இங்குள்ள மக்களிடம் அதையொட்டிய ஆர்வத்துக்கு குறைவில்லை.
சிவப்பு அட்டை
கால்பந்து விளையாட்டில் உரித்தான விதிகளுக்கு புறம்பாக விளையாடுகிற வீரர்களுக்கு சிவப்பு அட்டை (‘ரெட்கார்டு’) கொடுத்து வெளியேற்றி விடுவார்கள். அதே போன்றுதான் இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த 8 ஆண்டுகளில், வளர்ச்சியின்மை, ஊழல், அரசியல்சார்பு நிலை, வன்முறை, ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றுக்கு நாங்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றி விட்டோம். வடகிழக்கு பிராந்தியத்தில் விளையாட்டுகளின் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகமும், 90 முக்கிய விளையாட்டு திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நவீன இந்தியாவை உருவாக்குவோம்
ஊழல், பாகுபாடு, உறவுகளை கைதூக்கி விடல், வன்முறை அரசியல், ஓட்டு வங்கி அரசியல் ஆகியவை இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. அவற்றை நாங்கள் விரட்டி விட்டோம். மேலும் அந்த தீமைகளையெல்லாம் வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்காக அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றி வருகிறோம். அந்த தீமைகள் ஆழமாக வேரூன்றி இருக்கிறபோது, அவை ஒவ்வொன்றையும் வீழ்த்த நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அரசின் முயற்சிகள், நேர்மறையான முடிவுகளை காட்டுகின்றன. நவீன உள்கட்டமைப்பு, இணைப்பு வசதிகளுடன் நவீன இந்தியாவை உருவாக்குவதில் முடிவாக இருக்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும், அனைவரின் முயற்சியுடனும் விரைவான வளர்ச்சி நோக்கத்துடன் இணைப்பதுதான் எங்கள் லட்சியம் ஆகும்.
ரூ.7 லட்சம் கோடி
இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகளுக்ககாக மத்திய அரசு ரூ.7 லட்சம் கோடி செலவு செய்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இது வெறும் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.
எதிரிகளுக்கு நன்மையாக அமைந்து விடக்கூடாதே என்ற பயத்தின் காரணமாக எல்லைப்பகுதிகள் இணைப்புகள் ஏற்படுத்தப்படாமல் இருந்து வந்தன. ஆனால் இன்றைக்கு நாங்கள் தைரியமாக புதிய சாலைகள், பாலங்கள், ரெயில்பாதைகள், ஏன், எல்லையில் விமான ஓடுபாதைகளையும் உருவாக்குகிறோம். வெறிச்சோடிய எல்லையோர கிராமங்கள் எல்லாம் இப்போது துடிப்பு மிக்க கிராமங்களாக மாறி வருகின்றன.
போப் ஆண்டவர் சந்திப்பு
கடந்த ஆண்டு நான் வாடிகன் நகரத்துக்கு சென்றிருந்தேன். அங்கே நானும், போப் ஆண்டவரும் சந்தித்தபோது, மனித சமூகம் இன்று சந்தித்து வரும் சவால்கள் குறித்து விவாதித்தோம். இவற்றை சந்திப்பதில் கூட்டு முயற்சி தேவை என்ற ஒருமித்த கருத்துக்கு நாங்கள் வந்தோம். நாம் இந்த உணர்வை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2 லட்சம் வீடுகள் கிரகப்பிரவேசம்
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் நடந்த விழாவில், 2 லட்சம் குடும்பங்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.3,400 கோடி மதிப்பிலான வீடுகளின் கிரகபிரவேச நிகழ்வை பிரதமர் தொடங்கி வைத்தார். அகர்தலா புற வழிச்சாலை, 230 கி.மீ. தொலைவிலான 32 சாலைகள், ஆனந்த் நகரில் அமையும் மாநில ஓட்டல் மேலாண்மை கல்லூரி, அகர்தலா அரசு பல்மருத்துவ கல்லூரி உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:- 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றைக்கு சொந்த வீடுகளைப் பெறுகின்றன. இந்த வீடுகளைப் பெறுவோரில் பெரும்பாலோர் நமது தாய்மார்களும், சகோதரிகளும் ஆவார்கள். தூய்மைப்படுத்துதல் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு இயக்கமாக மாறி உள்ளது. அதன் பலனாக சிறிய மாநிலங்களில் மிகத்தூய்மையான மாநிலமாக திரிபுரா மாறி இருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்கட்டமைப்புக்காகவும், இணைப்புக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.