பதவியை இழக்காது இருக்க இராஜினாமா செய்த பருத்தித்துறை நகர சபை தலைவர்!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்ட கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு , விவாதங்கள் இடம்பெற விருந்தன.
குறித்த வரவு செலவு திட்டத்தினை , தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் உள்ளிட்ட , சபையில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்கள் தோற்கடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் , தலைவர் இன்றைய தினம் காலை சபை அமர்வுக்கு முன்பதாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் உட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வரைவு கடந்த 06ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட , 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்து தோற்கடித்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை திருத்தங்களுடன் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவு திட்டத்தினையும் உறுப்பினர்கள் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து நகர சபை தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இரண்டாம் தடவையும் , வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் , தலைவர் பதவி வறிதாகும். அந்நிலையில் தோற்கடிக்கப்பட்டு தலைவர் பதவியை இழக்காது இருப்பதற்காக தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”