;
Athirady Tamil News

சுற்றுலா தளமாக மாறிய போராட்டக்களம்..! (படங்கள்)

0

இலங்கையில் உள்ள சுற்றுலா அதிகாரசபையானது பண்டிகை காலம் வருவதால், கொழும்பில் அதிபர் செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட தளத்தை பண்டிகைக்கான தளமாக மாற்றியுள்ளனர்.

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் எந்த பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிலவிய இந்த வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருமாறியது. அதிபர் மற்றும் பிரதமராக இருந்த ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது.

இந்த நிலையில், கொழும்பில் அதிபர் செயலகம், காலி வீதியை அண்மித்த பகுதிகள் மற்றும் கொழும்பு தாமரைக் கோபுரத்திற்கு அருகில் ஒரே நேரத்தில் பல பண்டிகை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், முக்கியமாக இலங்கையின் சுற்றுலாத்துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை அகற்றும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

அதிபர் செயலகப் பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றப்பட்டு, ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற விளக்குப் பலகை தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிபர் செயலகப் பகுதிக்கு அருகாமையில் கரோல், இசை நிகழ்ச்சிகள், உணவு விற்பனை நிலையங்கள், நாய்க் காட்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை திறந்து வைத்தார்.

இலங்கை சுற்றுலா அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு, முப்படையினர் மற்றும் கொழும்பில் உள்ள பல விருந்தகங்களின் பங்குதாரர்கள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையில், கொழும்பு தாமரைக் கோபுரத்தில், கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர விருந்தகங்களின் பங்குதாரர்களுடன் இணைந்து 2022 டிசம்பர் 20 முதல் 28 வரை விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு தாமரை கோபுரத்தில் ஒவ்வொரு விருந்தகங்களில் இருந்தும் பலவகையான உணவு வகைகளை காட்சிப்படுத்தும் வகையிலும் சலுகை விலையில் உணவுப் பொருட்களையும் வழங்கும் வகையில் உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கையின் பல முன்னணி இசைக்குழுக்களின் பங்குபற்றுதலுடன் விசேட இசை நிகழ்ச்சிகளும் பண்டிகைக் காலங்களில் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.