கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த, மத்திய அரசு வலியுறுத்தல்..!!
இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 65 கோடியே 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் போடப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.