பாராளுமன்றத்தில் விதவிதமான தினை வகை உணவுகள் இடம் பெற்ற மதிய விருந்து- பிரதமர் மோடி பங்கேற்பு..!!
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தினை வகை உணவுகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் விளைவிக்கப்படும் சிறுதானிய பயிர்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினை உள்ளிட்ட சிறுதானிய பயிர் உற்பத்தி செய்யும் விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் மேலானோர் சிறு விவசாயிகள் என்ற பிரிவில் உள்ளதால், இந்த தானியங்களின் நுகர்வு உலக அளவில் அதிகரிப்பதுடன் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் விதவிதமான தினை வகை உணவுகள் இடம் பிடித்திருந்தன. பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில், 2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.