கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்..!!
பழைய ஓய்வூதிய திட்டம்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் பேசுகையில், பல்வேறு உறுப்பினர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றும், இதில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
ஒருதலைபட்சமாக முடிவு
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் விஷயத்தில் அரசு ஒருதலைபட்சமாக முடிவு எடுக்க முடியாது. இதை அமல்படுத்த வேண்டுமா?, வேண்டாமா? என்பது வேறு விஷயம். ஆனால் இதுபற்றி இங்கு விரிவாக விவாதம் நடைபெற வேண்டும். இந்த சபையின் உறுப்பினர்கள் அனைவரின் கருத்துகளையும் அறிந்த பிறகு அரசு தனது முடிவை அறிவிக்கும். ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக உறுப்பினர்கள் பேசினர். ஆனால் இந்த விஷயத்தில் இந்த சபை உறுப்பினர்களின் கருத்து அவசியம். அதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். சம்பள உயர்வு வழங்க 7-வது ஊதிய குழுவை அமைத்துள்ளோம்.
ஆகும் செலவுகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு ஆகும் செலவுகள், கஜானாவுக்கு ஏற்படும் நிதிச்சுமையை கணக்கு போட வேண்டியுள்ளது. அதன் பிறகு அரசு தனது முடிவை அறிவிக்கும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.