எல்லை பிரச்சினையில் உள்துறை மந்திரி கூட்டிய கூட்டத்தை கர்நாடகம் புறக்கணித்து இருக்க வேண்டும்; சித்தராமையா பேச்சு..!!
எல்லை பிரச்சினை
கர்நாடக சட்டசபையில் நேற்று விதி எண் 69-ன் கீழ் கர்நாடகம்-மராட்டியம் இடையேயான பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:- 1956-ம் ஆண்டு மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு பல்வேறு மாநிலங்களில் எல்லை பிரச்சினை எழுந்தது. 1947-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெலகாவி, விஜயாப்புரா, உத்தரகன்னடா மற்றும் தாாவார் மாவட்டங்கள் பாம்பே மாகாணத்தில் இருந்தன. அதன்பிறகு மொழி அடிப்படையில் அந்த பகுதிகள் கர்நாடகத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் இதற்கு மராட்டியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மகாஜன் குழு
கடந்த 1966-ம் ஆண்டு மெகர்சந்த் மகாஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையை மராட்டிய மாநிலம் ஏற்கவில்லை. அந்த அறிக்கையால் நமக்கு முழு அளவில் திருப்தி ஏற்படாவிட்டாலும், அதை ஏற்று கொண்டுள்ளோம். ஆனால் மராட்டிய மாநிலத்தினர், அரசியல் நோக்கத்திற்காக இந்த எல்லை பிரச்சினையை அப்படியே வைத்துள்ளனர்.
1981-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெலகாவியில் 64.39 சதவீதம் பேர் கன்னட மொழி பேசினர். 26 சதவீதம் பேர் மராட்டியம் பேசினர். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கன்னடம் பேசுவதால் அந்த பகுதி கர்நாடகத்தில் சேர வேண்டும் அல்லவா?. 1970-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மகாஜன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
துப்பாக்கி சூடு
கடந்த 2004-ம் ஆண்டு மராட்டிய மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில், மாநிலங்கள் பிரிவினை சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும் இந்த எல்லை பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்திற்குள் வராது. மகாஜன் அறிக்கையால் நமக்கு சில இழப்புகள் ஏற்பட்டது. ஆனாலும் அதை ஒப்பு கொண்டுள்ளோம். ஐரோப்பாவில் கூட மொழி அடிப்படையிலேயே நாடுகள் பிரிக்கப்பட்டன. அமெரிக்கா மட்டுமே இதில் இருந்து வேறுபட்டது. தேர்தல் வரும்போது, இந்த எல்லை பிரச்சினையை எழுப்பி மராட்டிய அரசியல்வாதிகள் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பெலகாவியில் உள்ள மராட்டிய அமைப்பினர் கர்நாடகத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். 1986-ம் ஆண்டு போராட்டம் நடந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சிலர் இறந்தனர்.
விட்டு கொடுக்க கூடாது
இதை வைத்து கொண்டு அந்த நாளில் மராட்டிய அரசியல்வாதிகள் பெலகாவிக்கு வந்து தூண்டி விடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கில் கர்நாடக அரசு நல்ல வக்கீலை நியமித்து வழக்கை நடத்த வேண்டும். உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தை கர்நாடக அரசு புறக்கணித்து இருக்க வேண்டும். கர்நாடகம், மராட்டியம் மற்றும் மத்தியில் பா.ஜனதா அரசுகள் தான் உள்ளன. 6 பேர் கொண்ட குழுவை அமைக்கும்படி உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இந்த முடிவை கர்நாடக அரசு ஏற்று கொண்டு இருக்க கூடாது. இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்க கூடாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளன. எல்லை விஷயத்தில் கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது. இந்த விஷயத்தில் அரசு திடமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.