வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் தொடரும் விபத்துகள்: 3 பேர் பலி; பலர் படுகாயம்..!!
டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாசலபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துகளும் தொடர்கதையாகி உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சார் மாவட்டம் குர்ஜா பகுதியில் மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்ற ஒரு லாரியின் டயர் ஒன்று திடீரென பஞ்சர் ஆனதால் அந்த லாரி கவிழ்ந்தது. அதன் மீது, பின்னால் வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காஷாம்பி மாவட்டத்தில் பிரயாக்ராஜ்-கான்பூர் நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு வாலிபர்கள் நின்றுகொண்டிருந்த ஒரு லாரி மீது மோதினர். இதில் அந்த வாலிபர்கள் ஒருவர் பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி வேன் விபத்து
ஹர்தோய் மாவட்டத்தில் சாலையில் சென்ற ஒரு மண் அள்ளும் எந்திரம் திடீரென திரும்பியது. அப்போது பின்னால் வந்த ஒரு பள்ளி வேன் அதன் மீது மோதியது. அதில் வேன் டிரைவரும், மாணவர்கள் 7 பேரும் காயமடைந்தனர். பாரபங்கி மாவட்டத்தில் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, சாலையில் நின்ற லாரி மீது வேகமாக வந்த ஒரு பஸ் மோதியது. பின்னர் அந்த பஸ் திசைமாறி, சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. அதில் 7 பேர் காயமடைந்தனர். சீதாப்பூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு லாரி மீது பின்னால் வந்த வேன் மோதியது. அதில் வேனில் பயணித்த 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ரெயில், விமான சேவை பாதிப்பு
வடமாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று சில இடங்களில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில விமான நிலையங்களில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.