வெள்ளை இளையான் பூச்சித் தொல்லை !
தென்னைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் தற்போது அதிகரித்து வரும் வெள்ளை இளையான் (Whitefly) எனும் பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்கான செயன்முறையை நிலைபேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இப்பூச்சித் தொல்லை தொடர்பில் தெங்குப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரை விழிப்புணர்வூட்டும் பல்வேறு வேலைத்திட்டங்களை தெங்கு ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல பொறுப்புக்கூறும் நிறுவனங்கள் கிராமிய மட்டத்தில் தற்போதும் முன்னெடுத்து வருகின்றன.
இவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலேயே இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களில் இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும் பங்கெடுத்தனர்.
காலநிலை மாற்றம், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தென்னங் கன்றுகளை பயிரிடுதல் மற்றும் இயற்கை ஒட்டுண்ணிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியன இப்பூச்சித் தொல்லையின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். கொழும்பு, கம்பஹா, கேகாலை, களுத்துறை உள்ளிட்ட நாட்டின் அனேகமான பிரதேசங்களில் தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் இப்பூச்சித் தொல்லைக்கு தற்போது முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள செயன்முறையை நடைமுறைப்படுத்துகையில் அதிகாரிகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே பிரதேச செயலாளர் முதல் கிராம உத்தியோகத்தர் வரை அனைவரையும் இணைத்துக் கொள்ளும் வகையிலான வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக் குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை வழங்கினார்.
மேலும் வெள்ளை இளையான் பூச்சித் தொல்லைக் காரணமாக சேதமடைந்த பயிர்கள் தொடர்பில் மிகத் திருத்தமான தரவுகளை சேகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், பல்கலைக்கழகங்களில் இவ்விடயம் தொடர்பில் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பை பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்காக பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பூச்சிகளை முற்றாக ஒழிப்பதற்கும் அவசியமான இயற்கை ஒட்டுண்ணிகளை வளர்த்தல், இயந்திரங்களை கொள்வனவு செய்தல் போன்ற துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை வழங்கினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.