உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த போது கேரளாவில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை..!!
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடந்த போது கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் தங்கள் ஆதரவு அணிக்காக கட்-அவுட்கள் அமைத்தும், பெரிய திரை அமைத்தும் போட்டியை ரசிக்கவும் செய்தனர். இறுதி போட்டி நடந்த நாள் அன்று கேரளாவின் பல மாவட்டங்களில் கால்பந்து ரசிகர்கள் விடிய, விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் தகராறு மூண்டு மோதல் சம்பவங்களும் நடந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலக கோப்பை இறுதி போட்டி நடந்த நாள் அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, கேரளாவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் ரூ.33 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் உலக கோப்பை இறுதி போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அன்று வழக்கத்தை விட ரூ.15 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அடுத்து கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள 301 மதுக்கடைகள் மூலம் சுமார் ரூ.600 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.