பாடசாலை மாணவர்களுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி..!
தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில் பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது, அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும், பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
காலங்காலமாக,நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும்,நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு அதிபர் எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.