முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் நில அபகரிப்பு! மக்களின் தலையீட்டால் முறியடிப்பு !!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்விக காணியினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவைத் திணைக்களத்தினர் நேரடியாக குறித்த பகுதிக்கு வந்து 4 கிலோமீற்றருக்கு மேற்பட்ட இடங்களுக்கு எல்லைக்கற்களை நாட்டியுள்ளார்கள்.
இதனை மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களை அகற்ற வைத்துள்ளார்கள்.
கடந்த 18.12.2022 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் கோட்டைக்கேணிபிள்ளையார் கோவில், முதல் அம்பட்டன்வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி, சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு மக்கள் முறையிட்டதை தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் 19.12.2022 அன்று சம்பவ இடத்துக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் அனைவரும் குறித்த பகுதிக்குச் சென்று அங்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அழைத்திருந்த நிலையில் அவர்கள் அங்கு பிரசன்னமாகினர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் அழைக்கப்பட்டுனர்.
அனைவருக்கும் இந்த எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்கள் மக்களின் உறுதிக்காணி என்பதை மக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு அமைய அவர்கள் போட்ட கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களமோ அல்லது நில அளவைத் திணைக்களமோ மாவட்ட செயலாளருடனும் பிரதேச செயலாளருடனும் கூடி கலந்துரையாடுவதுடன் இந்தப் பிரதேசத்தின் அமைப்புக்களையும் அழைத்து கலந்துரையாடல் செய்யாமல் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவேண்டாம் என்பதை இதன்போது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.