அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய குழு!!
ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
60 வயது பூர்த்தியாகும் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் 25 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களை மாத்திரமே அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க விரும்பும் ஊழியர்களின் பட்டியலையும், ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக தேவைப்படும் ஆட்சேர்ப்புகளின் எண்ணிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களிடம் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கிணங்க, அரச திணைக்களங்கள் மற்றும் துறைகளில் அத்தியாவசியமான பதிலீட்டு தேவைகளை மட்டுமே தெரிவிக்குமாறு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு மொத்தமாக ஒரு டிரில்லியன் ரூபாய்களை அரசாங்கம் செலவழிப்பதால் அந்த ஒதுக்கீட்டில் இருந்தே பதில் ஆட்சேர்ப்புகளுக்கும் செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.