இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் தொடரும் கடத்தல் சம்பவங்களால் அப்பகுதி சர்வதேச கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி விட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகினால் அதில் வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டினம் மீனவ கிராமத்தின் பெயர் நிச்சயம் இடம் பெறுகிறது.
நவம்பர் மாதம் 21ந்தேதி இரவு வேதாளை கடற்கரைக்கு அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சொகுசு காரில் கொண்டு வரப்பட்ட 300 கிலோ வெள்ளை பவுடர் பிடிபட்ட செய்தி உள்ளூர் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை செய்தி வெளியாகி பெரும் பேசும் பொருளாக மாறிய மறுநாளே அதே வேதாளை கடற்கரையில் இலங்கைக்குக் கடத்த இருந்த 2000 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தினசரி வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் இங்கிருந்து கடத்தி செல்லப்பட்ட கடத்தல் பொருட்கள் இலங்கையில் அந்நாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இலங்கைக்கு இதைக்கூட கடத்துவார்களா?
தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவ கிராமங்களான வேதாளை, மரைக்காயர் பட்டினம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப் பொருள், கஞ்சா ஆயில், சமையல் மஞ்சள், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, விவசாய உரம், பீடி இலை, உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக மரைக்காயர்பட்டிணம், வேதாளை, சீனியப்பா தர்கா கடற்கரை வழியாக தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டு பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மற்றும் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் சமீப காலமாக வேதாளையில் இருந்து இலங்கைக்கு செருப்பு, வலி நிவாரணி, அழகு சாதன பொருட்கள், சோப்பு, வெள்ளி கொலுசு உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நெய்ல் பாலிஷ் வாசனையுடன் கூடிய திரவங்கள் கடத்தப்படுகிறது.
1000 லிட்டர் நெய்ல் பாலிஷ் பறிமுதல்
வேதாளை தெற்கு தெருவில் புர்கான் அலி என்பவருக்குச் சொந்தமான அரசு தூய்மை பாரத திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் கேன்களில் நெய்ல் பாலிஷ் மற்றும் அது சார்ந்த மூலப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் சட்ட ஒழுங்கு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் அடங்கிய குழு வியாழக்கிழமை அதிகாலை புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டிற்குள் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து 46 பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 1000 லிட்டர் நெய்ல் பாலிஷ் வாசனையுடன் கூடிய திரவங்கள் மற்றும் நெய்ல் பாலிஷ் பாட்டிலில் உள்ள சிறிய பிரஷ்கள் உதிரிகளாகக் கிடைத்தது.
இதையடுத்து நெய்ல் பாலிஷ் வாசனையுடன் கூடிய திரவங்கள் அடைக்கபட்ட பிளாஸ்டிக் கேன்களை பறிமுதல் செய்த போலீசார் அதை மண்டபம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் நெய்ல் பாலிஷ் வாசனையுடன் கூடிய திரவங்கள் அடைக்கபட்ட பிளாஸ்டிக் கேன்கள் வேதாளை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது வீட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்
வேதாளை கடற்கரையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு நாட்டுப்படகில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை கடத்த இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வேதாளை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் ஏறி போலீசார் சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகுக்குள் சுமார் 20 மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுப்படகில் இருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் அதனை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், மொத்தமாக 1100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கலாம் என போலீசார தெரிவித்துள்ளனர்.
மேலும் கடல் அட்டைகளை கடத்த பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகு பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாட்டுப் படகின் உரிமையாளர் மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை, வேதாளை, மரைக்காயர்பட்டிணம் சீனியப்பா தர்கா, உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
80 கோடி மதிப்பிலான போதை பொருள் சிக்கியது எப்படி
மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல போதைப்பொருள் சென்னையில் இருந்து காரில் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 12ந்தேதி மத்திய வருவாய் துறையினர் ராமநாதபுரம் – மதுரை வரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சத்திரக்குடி சுங்கச்சாவடியைக் கடக்க முயன்ற சென்னை செங்குன்றம் பதிவெண் கொண்ட காரை நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்த இருவரும் முரண்பட்ட பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அதில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அப்போதைப் பொருளை காருடன் பறிமுதல் செய்து, இருவரையும் ராமநாதபுரம் சுங்க அலுவலகம் அழைத்து வந்து பறிமுதல் செய்த போதைப் பொருளை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ கஞ்சா எண்ணெய், 38 கிலோ கிரிஸ்டல் மெத்தா பெட்டமைன் (ஐஸ் போதைப் பொருள்) இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.80 கோடி இருக்கலாம் என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பொருளை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூர் சேர்ந்த இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.