;
Athirady Tamil News

செக்ஸ் உறவுக்கான வயதை குறைக்க திட்டமா?: மந்திரி ஸ்மிருதி இரானி பதில்..!!

0

பாராளுமன்ற மாநிலங்களவையில், “ஒருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:- கருத்தொருமித்து ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து (செக்ஸ்) உறவு கொள்வதற்கான வயது 18 என்பதை 16 ஆக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்ற கேள்விக்கே இடம் இல்லை. போக்சோ சட்டம், 2012, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகத்தான் இயற்றப்பட்டது. இந்த சட்டம், 18 வயதுக்கு கீழே உள்ள எந்த நபரையும் குழந்தை என்றுதான் வரையறை செய்துள்ளது. குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும், குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் குழந்தையால் குற்றம் செய்யப்பட்டால் போக்சோ சட்டத்தின் பிரிவு 34, குழந்தையால் குற்றம் செய்யப்படுவது மற்றும் சிறப்பு கோர்ட்டால் வயதை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறையை வழங்குகிறது. ஒரு நபர் குழந்தையா, இல்லையா என்கிற கேள்வி, சிறப்பு கோர்ட்டில் எழுந்தால், அந்த நபரின் வயது தொடர்பாக திருப்தி அடைந்து, சிறப்பு கோர்ட்டே தீர்மானிக்கலாம். அப்படி தீர்மானிக்கிறபோது அதற்கான காரணங்களை கோர்ட்டு பதிவு செய்ய வேண்டும். 1875-ம் ஆண்டு இயற்றப்பட்ட முதிர்ச்சி சட்டம், 1999-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இது முதிர்ச்சி அடைவதற்கான வயது 18 என்று கூறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பால்ய விவாகம் என்று அழைக்கப்படுகிற குழந்தை திருமணம் பற்றிய மற்றொரு கேள்விக்கும் மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார். அதில் அவர், “தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என காட்டுகின்றன. ஆனால் இது குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தொடர்பான அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்தளவுக்கு குழந்தைகள் திருமணங்கள் நடந்திருப்பது புகார் செய்யப்பட்டு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு 523 குழந்தை திருமணங்களும், 2020-ல் 785 குழந்தை திருமணங்களும், 2021-ம் ஆண்டு 1,050 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.